
திருநல்லூர் - அருப்புக்கோட்டையின் மற்றொரு பெயர்! தெய்வத்தமிழ் நாட்டில் மீனாட்சி ஆளும் மதுரைக்குத்தெற்கே விருதுநகர் மாவட்டத்தில், நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள ஓர் அழகிய ஊர்! இதற்கு United Streets of Aruppukottai (USA) என்ற செல்லப்பெயரும் உண்டு! :)
அரும்பு+கோட்டை =அருப்புக்கோட்டை, மனம் பரப்பும் மல்லிகை அரும்புகள் அதிகம் விளையும் இடமாதலால் இந்த பெயர் என்று எனது ஏழாம் வகுப்பு தமிழாசிரியர் சொன்னதாக ஞாபகம்.ஊருக்கு நடுவே ஒரு அம்மன் கோயில்,அருகில் ஒரு அளவான தெப்பக்குளம் என்று முன்னோர்களின் திட்டமிடுதலை இன்றும் பறை சாற்றும் ஒரு அமைப்பு.வானம் பார்த்த பூமிக்கு ஏற்றவாறு ஊருக்கு வெளியே விழும் மழை நீரை கிழக்கிலிருந்தும் ,வடக்கி்லிருந்தும் ஒடைகள் வழியாக வரவைத்து நாண்கு பெரிய மடைகள் மூலமாக தெப்பத்திற்குள் சேர்க்கும் அந்த பெரியோரின் வாழ்க்கை கண்டிப்பாக மிகச்சிறப்பானதாக தான் இருந்திருக்க வேண்டும்.நான் மீன் போன்று நீச்சல் கலை பயின்றதும் இந்த தெப்பக்குளத்தில் தான்.
தெப்பத்திற்கு கிழக்கே அமைந்துள்ளன எனக்கு கல்விக்கண் திறந்த பள்ளிகள்.லயன்ஸ் ஜூனியர் ஸ்கூல் (LJS) என்ற ஆங்கில வழிக்கல்விக்கூடத்தில் ஆரம்பித்த எனது பள்ளிப்பருவம் ஏழு வருடம் கழித்து அதன் அருகில் அமைந்துள்ள சைவபானு ஷத்திரிய மேல்நிலைப்பள்ளியில் (SBK) மீதி ஏழு வருடத்தை தொடர்ந்தது.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
- வள்ளுவன் மொழிக்கேற்ப எனக்கு அறிவொளி ஏற்றியவை இப்பள்ளிகள்.வெகு சுமாரான மாணவனாக ஆரம்பித்து ஒர் அளவுக்கு சிறப்பான மாணவனாக என் கல்விக்கும் வாழ்க்கைக்கும் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தன.அடிக்கடி நடக்கும் திருக்குறள் போட்டிகள்,பேச்சு கட்டுரைப் போட்டிகள்,மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்,ஆண்டு விழாக்கள் என்று சிறு பல்கலைக்கழகங்களாக அவை விளங்கின.சில நாட்கள் நான் ஆடிய ஹாக்கி,பரீட்சை அட்டையில் விளையாடிய மக்காச்சோள கிரிக்கெட், ரெட் செர்ரி யில் விளையாடிய பிரிட்டிஷ் கிரிக்கெட் ,ஆண்டு விழாவில் பிள்ளையாருக்கு நான் குடுத்த குரல்,விழுந்து விழுந்து படித்த நாட்கள்,வகுப்பரை ஊமைக்குசும்புகள்,விஸ்தாரமான விளையாட்டரங்கங்கள் என்று இப்பள்ளிகளில் நான் செலவலித்த என் வாழ்வின் இனிய தருணங்கள் இன்றும் மனதை வருடுகின்றன.
பள்ளியில் இருந்து அப்பா வாங்கிக்கொடுத்த அழகிய சிகப்பு நிற CAPTAIN சைக்கிளில் வடக்கே நாலரை கிமீ தள்ளி உள்ள வீட்டுக்கும் அங்கிருந்து பள்ளிக்கும் செல்வது ஒரு இனிய அனுபவம். Michael Schumacher உம் Naren Karthikeyan களும் கண்டிப்பாக வியந்திருப்பார்கள் நாங்கள் இந்த அற்புத வாகனத்தில் செல்வதைப்பார்த்திருந்தால்.ஆள் அரவமற்ற ரயில் நிலையம் தாண்டி அந்த மாலைப்பொழுதில் பயணம் செய்யும் சுகம் SKODA வில் கூட கிடைக்காது தான்!
சற்று வடக்கெ சென்ற நினைவுகளை பின்னிழுத்து தென் மேற்கே சென்றால் திருநல்லூரின் மக்கள் அதிகம் வந்து போகும் இடமான கடைத்தெருக்கள்.எனக்கு தெரிந்தவரை ஒரு மனிதனின் அன்றாட வாழ்விற்கு தேவையான பொருட்களில் இருந்து அவனது சுகபோகத்துக்கு தேவையானவை வரை அனைத்தும் கிடைக்கும் பெரிய பெரிய வீதிகள்,மாலையில் மின் விளக்குகள் ஒளிரும் எங்கள் ஊர் Times Square உம் அது தான்.ஊரின் பெரும்பாலான மக்கள் வணிகர்கள் என்பதால் இந்த கடைத்தெருக்கள் தான் ஊரின் ஜீவாதாரமும் கூட!கள்ளம் கபடமற்ற அந்த மக்களிடம் பொருட்களை வாங்குவதே ஒரு அலாதியான அனுபவம்!100 சதவீத திருப்தியுணர்வு நிச்சயம்.
அப்படியே அந்த சுமார் 15 சதுர கிமீ பரப்பளவுள்ள கடைத்தெருக்களுக்கு வடக்கெ பயண்மானால் வானை முட்டும் கோபுரங்களைக் கொண்ட கம்பீரமான் சிவன் கோயில் காட்சியளிக்கும். சிவன் கோயில் கொண்ட ஊர் என்பதே ஒரு சிறப்பான விஷயமாகும்.என தந்தையாருடன் சிறு வயதில் அடிக்கடி வந்து வழிபட்ட கோயில் இது. கிட்டத்தட்ட 12 அடி அளவுள்ள விநாயகர் உருவம், அமைதியான சிவலிங்கம்(அமுதலிங்கேஸ்வரர்),உக்கிரமான துர்க்கை அம்மன்,கருணை ததும்பும் அமுதலிங்கேஸ்வரி,காக்கும் பெருமாள்,துணை நிற்கும் ஆஞ்சநேயர்,அழகே வடிவான முருகன் சிலை என்று பக்திப்பரவசம் பொங்கும் வழிபாட்டுத்தலம் அது. சொற்பொழிவு மண்டபம்,உற்சவத்திருவிழாக்கள் என கலகலவென விளங்கும் சிவன் கோயில் எங்கள் ஊர் அமுதலிங்கேஸ்வரர் திருக்கொயில்!
சிவன் கோயிலுக்கு வடக்கே கிட்டத்தட்ட ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன ஓங்கி உயர்ந்த ஒரு மசூதியும்,அன்பை போதித்த ஏசுபெருமானின் திருத்தலமும்.
இவ்வூரின் மதசார்பின்மையின் அடையாளங்கள் இவை!பக்தியின் நிழலில் இருந்து சற்று வெளியே வந்தால் இவ்வூரின் முக்கியமான பொழுதுபொக்கு அம்சங்கள்- திரையரங்குகள். ஊரைச்சுற்றி ஒரு வட்டம் போட்டால் சம அளவு தூரத்தில் ஆறு திரையரங்குகள் அவ்வட்டத்தில் அமைந்துள்ளன.காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு உழைத்துக்களைக்கும் இவ்வூர் மக்களை களைப்பாறச்செய்து கொண்டிருக்கின்றன.
முன்பு சென்ற மசூதிக்கு அருகில் சென்று சற்று வடக்கே நகர்ந்தால் திருநல்லூரின் பெரிய புதிய பேருந்து நிலையம்.இவ்வூர் மக்களுக்கு மட்டுமன்றி சுற்றியுள்ள ஊர் மக்களுக்கும் வெளியுலகத்தின் வாசலாகத் திகழும் முக்கியமான பேருந்து நிலையம் இது.
நான் பிறந்த என் ஊரின் பறவைப்பார்வைப் பதிவு தான் இந்தப் பக்கம்!முழுவதும் அறிந்து கொள்ள உங்கள் பொழுதை இனிமையாந்தாக்க ஒரு முறை எங்கள் ஊருக்கு விஜயம் செய்து பாருங்களேன்!! :)
