Tuesday, February 13, 2007

காதல் என்னும் மந்திரச்சொல்

அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த்தற்று - வள்ளுவன்

வள்ளுவன் எழுதிய வாழ்வியல் நூலில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக ஆக்ரமித்துள்ள மந்திரச்சொல் - காதல் என்னும் அன்பு. அய்யனை விடவா ஒருவர் வாழ்க்கையை வகை பிரிக்க முடியும்.மனித வாழ்வின் அடித்தளமான அந்த அன்பை... காதலை பற்றி ஒரு சிறு பதிவு செய்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே காதலர் தினத்திற்கு முந்தைய நாளின் இந்த பதிவு!

மனிதன் உயிர் மூச்சு பெறும் அந்த கணத்திலேயே அவன்/அவளால் உணரப்படும் முதல் உணர்வே தாயின் அன்புதான்.அப்போதிலிருந்து அவன் கடைசி மூச்சு விடும் மரணம் வரை அவனைத்தொடர்கிறது காதல்.
சாதாரணமாக அவனது புத்திக்கு எட்டாமல் இருக்கும் இந்த நிலைமை வாழ்வின் சில தருணங்களில் அவனை முழுவதும் ஆக்ரமித்து அந்த சிறிய மூளைக்குள் இறங்கி அவனை தெய்வ நிலைக்கு இட்டுச்செல்லும்.

சரி ,எப்பொழுதெல்லாம் அந்த தருணங்கள் வரக்கூடும்? முதல் தருணம் சற்றே நீண்ட காலத்தைக்கொண்ட குழந்தைப்பருவம்.தாயின் அரவணைப்பிலும் அவளது முழு நிழலான கவனத்திலும் வளரும் அந்த விவரம் தெரியும் பருவத்துக்கு முந்தைய நிலை தான் முதல் தெய்வநிலை.உச்சி முதல் உள்ளங்கால்கள் வரைக்கும் அந்த தெய்வ நிலையில் சிலிர்த்த நிலையில் இருக்கும்.99.99 சதவீத மனிதர்களுக்கு அவர்களுடைய வாழ்வில் இந்த நிலையை நிச்சயமாக்கிக் கொடுத்த தாய் என்னும் தெய்வத்துக்கு நன்றி. மனிதனின் ஐம்புலன்களை ஒவ்வொன்றாக இயங்க வைக்கும் அந்த காதல்
தான் வாழ்க்கைக்கு அடித்தளம். இந்த அன்பை சற்று ஆழ்ந்து ஆராய்ந்தோமானால் இவ்வுலகின் எல்லாவற்றுக்கும் மேலாக அதிக சக்தி வாய்ந்த இந்த அன்பே சிவம் என்ற உண்மை புலப்படும்.

காதல் புத்திக்கு புரியும் அடுத்த தருணம் முதன் முதலாக நம்மோடு சம்பந்தமில்லாத ஒருவரிடம் இருந்து கிடைக்கும் வாழ்வின் முதல் நட்பு.
ஒரே பாலைச்சேர்ந்தவராயினும் எதிர்பாலைச்சேர்ந்தவராயினும் நமக்கு முதலில் கிடைக்கும் அந்த நட்பு மகத்தானது. தனியனாய் இந்த உலகத்தின் வெட்டவெளியில் கால் பதிக்கும் அந்த நிலையில் தோளோடு தோள் சேர்ந்து அச்சம் நீக்கி இந்த உலகை வெல்லப்புறப்பட வைக்கும் அந்த உந்து சக்தியின் உணர்வு மகத்தானது.நாம் இருவர் மட்டுமே என்ற அந்த இறுமாப்புடன் அலையும் அந்த உலக வாழ்க்கை கண்டிப்பாக அனைவருக்கும் விதிக்கப்பட்டது.சிலருக்கு மிகச்சிறிய வயதில் கிடைக்கலாம் சிலருக்கு சற்று தாமதமாகக்கிடைக்கலாம்,ஆனால் நிச்சயம் அதைக்கடந்து தான் செல்ல வேண்டும். சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் இந்த தெய்வ நிலை தான் நம்மை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது.நம்முடைய வெளி உலக உருவத்தை உருவாக்கி வாழ்க்கைப் போற்களத்தில் போராட தயார் செய்கிறது.முதல் தெய்வ நிலை தந்த உயிருக்கு, அந்த ஆன்மாவுக்கு இந்த இரண்டாம் தெய்வநிலை புறத்தோற்றம் கொடுக்கிறது. உச்சி முதலான பாகங்கள் அனைத்தும் சிலிர்த்த நிலையில் இருந்து அமைதி அடைந்து எச்சரிக்கை நிலைக்கு செல்கிறது.

அடுத்த தருணம் நமக்கு எதிர்பாலைச்சேர்ந்தவரோடு நிகழும் அந்தக் அகக்காதல் உணர்வு. நம் புத்திக்குள் வெகு எளிதாக நுழையும் அந்த தருணம் நம்முடைய முதல் தெய்வநிலைக்குச் சமமான ஒன்று.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து முற்றிலும் வெவ்வேறான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் அந்த தருணம் வந்தவுடன் தவறாது நம் முன் தோன்றும் அந்த காதலியை , அழைத்து வரும் அந்த காதலை எளிதில் ஆராய முடியாது ஆனால் எளிதில் அனுபவிக்கமுடியும்..முற்றிலும் உணர முடியும். முந்தைய நிலைகளைப்போன்று புற உடல்/உயிர் முழுவதும் உணரப்பட்டாலும் இதயமும் கண்களும் இந்நிலையில் முதன்மை பெறுகின்றன.முழுவதும் ஆக்ரமிக்கின்றன.நம்மை இறைவனின் பாதங்களுக்கு அழைத்துச்செல்கின்றன்.
ஒரு கவிஞன் சொன்னது போல் உலகம் புதிதாகத்தோன்றும் , எண்ணங்கள் விசாலமடையும், பிரபஞ்சம் நம் காலடியில் கிடக்கும்.ஒளியை விடவும் வேகமாக காலம் ஓடினாலும்,அதனைவிடவும் வேகமாக மனது மேலும் இளமையாகும்.புதிய கவிஞன் பிறப்பான், உலகை வென்ற மாவீரன் நம்முள் ஒளிர்வான்.சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் இந்த தெய்வநிலைதான் நம்முடைய வாழ்வின் வெற்றி, உலகம் என்னும் போற்க்களத்தில் நாம் பெற்ற மாபெரும் வெற்றி. நம் வாழ்வின் அர்த்தம் புரிய வைத்த இறுதி வெற்றி.நம் வாழ்க்கைப்பயணத்தின் கடைசி எல்லைக்கோடு வரை நம்மோடு உறவாடப்போகும் ..தொடரப்போகும் வெற்றி. இந்த தெய்வ நிலையை அடைய வைத்த தாயின் மற்றொரு பதிப்பாம் காதலிக்கு நன்றி!

அடுத்ததும் இறுதியானதுமான தருணம் இவ்வுலகுக்கு நாம் விட்டுச்செல்லும் நம்முடைய அடையாளம்.அது ஒரு உயிராகவும் இருக்கலாம். நம் உயறிய எண்ணங்கள் ,செய்கைகள்,கனவுகளின் பிரதிபலிப்புகளாகவும் இருக்கலாம்
இதன் மூலம் இந்த மனித சமுதாயம் அடையும் நன்மைகள் மேன்மைகள் ,அதன் மூலம் வெளிப்படும் அந்த காதல் தான் நம்மை இறைவனின் காலடியில் இருந்து அவன் உயிருக்குள் இறங்க வைக்கும் இவ்வுலக வாழ்வின் பெரியதும் அரியதுமான இரகசியம்.

காதல் என்னும் இந்த மந்திரச்சொல் தான் மனித வாழ்வின் முதலும் முடிவும்!

மீண்டும் சந்திக்கும் வரை ...விடை பெறும் உங்கள் நண்பன் :)

Monday, January 29, 2007

திருநல்லூர்



திருநல்லூர் - அருப்புக்கோட்டையின் மற்றொரு பெயர்! தெய்வத்தமிழ் நாட்டில் மீனாட்சி ஆளும் மதுரைக்குத்தெற்கே விருதுநகர் மாவட்டத்தில், நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள ஓர் அழகிய ஊர்! இதற்கு United Streets of Aruppukottai (USA) என்ற செல்லப்பெயரும் உண்டு! :)

அரும்பு+கோட்டை =அருப்புக்கோட்டை, மனம் பரப்பும் மல்லிகை அரும்புகள் அதிகம் விளையும் இடமாதலால் இந்த பெயர் என்று எனது ஏழாம் வகுப்பு தமிழாசிரியர் சொன்னதாக ஞாபகம்.ஊருக்கு நடுவே ஒரு அம்மன் கோயில்,அருகில் ஒரு அளவான தெப்பக்குளம் என்று முன்னோர்களின் திட்டமிடுதலை இன்றும் பறை சாற்றும் ஒரு அமைப்பு.வானம் பார்த்த பூமிக்கு ஏற்றவாறு ஊருக்கு வெளியே விழும் மழை நீரை கிழக்கிலிருந்தும் ,வடக்கி்லிருந்தும் ஒடைகள் வழியாக வரவைத்து நாண்கு பெரிய மடைகள் மூலமாக தெப்பத்திற்குள் சேர்க்கும் அந்த பெரியோரின் வாழ்க்கை கண்டிப்பாக மிகச்சிறப்பானதாக தான் இருந்திருக்க வேண்டும்.நான் மீன் போன்று நீச்சல் கலை பயின்றதும் இந்த தெப்பக்குளத்தில் தான்.

தெப்பத்திற்கு கிழக்கே அமைந்துள்ளன எனக்கு கல்விக்கண் திறந்த பள்ளிகள்.லயன்ஸ் ஜூனியர் ஸ்கூல் (LJS) என்ற ஆங்கில வழிக்கல்விக்கூடத்தில் ஆரம்பித்த எனது பள்ளிப்பருவம் ஏழு வருடம் கழித்து அதன் அருகில் அமைந்துள்ள சைவபானு ஷத்திரிய மேல்நிலைப்பள்ளியில் (SBK) மீதி ஏழு வருடத்தை தொடர்ந்தது.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
- வள்ளுவன் மொழிக்கேற்ப எனக்கு அறிவொளி ஏற்றியவை இப்பள்ளிகள்.வெகு சுமாரான மாணவனாக ஆரம்பித்து ஒர் அளவுக்கு சிறப்பான மாணவனாக என் கல்விக்கும் வாழ்க்கைக்கும் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தன.அடிக்கடி நடக்கும் திருக்குறள் போட்டிகள்,பேச்சு கட்டுரைப் போட்டிகள்,மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்,ஆண்டு விழாக்கள் என்று சிறு பல்கலைக்கழகங்களாக அவை விளங்கின.சில நாட்கள் நான் ஆடிய ஹாக்கி,பரீட்சை அட்டையில் விளையாடிய மக்காச்சோள கிரிக்கெட், ரெட் செர்ரி யில் விளையாடிய பிரிட்டிஷ் கிரிக்கெட் ,ஆண்டு விழாவில் பிள்ளையாருக்கு நான் குடுத்த குரல்,விழுந்து விழுந்து படித்த நாட்கள்,வகுப்பரை ஊமைக்குசும்புகள்,விஸ்தாரமான விளையாட்டரங்கங்கள் என்று இப்பள்ளிகளில் நான் செலவலித்த என் வாழ்வின் இனிய தருணங்கள் இன்றும் மனதை வருடுகின்றன.

பள்ளியில் இருந்து அப்பா வாங்கிக்கொடுத்த அழகிய சிகப்பு நிற CAPTAIN சைக்கிளில் வடக்கே நாலரை கிமீ தள்ளி உள்ள வீட்டுக்கும் அங்கிருந்து பள்ளிக்கும் செல்வது ஒரு இனிய அனுபவம். Michael Schumacher உம் Naren Karthikeyan களும் கண்டிப்பாக வியந்திருப்பார்கள் நாங்கள் இந்த அற்புத வாகனத்தில் செல்வதைப்பார்த்திருந்தால்.ஆள் அரவமற்ற ரயில் நிலையம் தாண்டி அந்த மாலைப்பொழுதில் பயணம் செய்யும் சுகம் SKODA வில் கூட கிடைக்காது தான்!

சற்று வடக்கெ சென்ற நினைவுகளை பின்னிழுத்து தென் மேற்கே சென்றால் திருநல்லூரின் மக்கள் அதிகம் வந்து போகும் இடமான கடைத்தெருக்கள்.எனக்கு தெரிந்தவரை ஒரு மனிதனின் அன்றாட வாழ்விற்கு தேவையான பொருட்களில் இருந்து அவனது சுகபோகத்துக்கு தேவையானவை வரை அனைத்தும் கிடைக்கும் பெரிய பெரிய வீதிகள்,மாலையில் மின் விளக்குகள் ஒளிரும் எங்கள் ஊர் Times Square உம் அது தான்.ஊரின் பெரும்பாலான மக்கள் வணிகர்கள் என்பதால் இந்த கடைத்தெருக்கள் தான் ஊரின் ஜீவாதாரமும் கூட!கள்ளம் கபடமற்ற அந்த மக்களிடம் பொருட்களை வாங்குவதே ஒரு அலாதியான அனுபவம்!100 சதவீத திருப்தியுணர்வு நிச்சயம்.

அப்படியே அந்த சுமார் 15 சதுர கிமீ பரப்பளவுள்ள கடைத்தெருக்களுக்கு வடக்கெ பயண்மானால் வானை முட்டும் கோபுரங்களைக் கொண்ட கம்பீரமான் சிவன் கோயில் காட்சியளிக்கும். சிவன் கோயில் கொண்ட ஊர் என்பதே ஒரு சிறப்பான விஷயமாகும்.என தந்தையாருடன் சிறு வயதில் அடிக்கடி வந்து வழிபட்ட கோயில் இது. கிட்டத்தட்ட 12 அடி அளவுள்ள விநாயகர் உருவம், அமைதியான சிவலிங்கம்(அமுதலிங்கேஸ்வரர்),உக்கிரமான துர்க்கை அம்மன்,கருணை ததும்பும் அமுதலிங்கேஸ்வரி,காக்கும் பெருமாள்,துணை நிற்கும் ஆஞ்சநேயர்,அழகே வடிவான முருகன் சிலை என்று பக்திப்பரவசம் பொங்கும் வழிபாட்டுத்தலம் அது. சொற்பொழிவு மண்டபம்,உற்சவத்திருவிழாக்கள் என கலகலவென விளங்கும் சிவன் கோயில் எங்கள் ஊர் அமுதலிங்கேஸ்வரர் திருக்கொயில்!

சிவன் கோயிலுக்கு வடக்கே கிட்டத்தட்ட ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன ஓங்கி உயர்ந்த ஒரு மசூதியும்,அன்பை போதித்த ஏசுபெருமானின் திருத்தலமும்.
இவ்வூரின் மதசார்பின்மையின் அடையாளங்கள் இவை!பக்தியின் நிழலில் இருந்து சற்று வெளியே வந்தால் இவ்வூரின் முக்கியமான பொழுதுபொக்கு அம்சங்கள்- திரையரங்குகள். ஊரைச்சுற்றி ஒரு வட்டம் போட்டால் சம அளவு தூரத்தில் ஆறு திரையரங்குகள் அவ்வட்டத்தில் அமைந்துள்ளன.காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு உழைத்துக்களைக்கும் இவ்வூர் மக்களை களைப்பாறச்செய்து கொண்டிருக்கின்றன.

முன்பு சென்ற மசூதிக்கு அருகில் சென்று சற்று வடக்கே நகர்ந்தால் திருநல்லூரின் பெரிய புதிய பேருந்து நிலையம்.இவ்வூர் மக்களுக்கு மட்டுமன்றி சுற்றியுள்ள ஊர் மக்களுக்கும் வெளியுலகத்தின் வாசலாகத் திகழும் முக்கியமான பேருந்து நிலையம் இது.

நான் பிறந்த என் ஊரின் பறவைப்பார்வைப் பதிவு தான் இந்தப் பக்கம்!முழுவதும் அறிந்து கொள்ள உங்கள் பொழுதை இனிமையாந்தாக்க ஒரு முறை எங்கள் ஊருக்கு விஜயம் செய்து பாருங்களேன்!! :)

Wednesday, January 3, 2007

வாழ்க்கை அழகானது!


நான் பார்த்த சில மேலை மொழிப்படங்களில் என் மனதை வெகுவாகக் கவர்ந்த திரைப்படம் இத்தாலிய மொழியில் வெளி வந்த Life is Beautiful . இப்படத்தை ஆங்கில வசனங்களுடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் மனித உணர்வுகளுக்கு மொழி முக்கியமில்லை என்பதை படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே நான் உணர்ந்தேன்.

இரண்டாம் உலகப்போரின் போது இத்தாலியில் வாழ்ந்த ஒரு யூத இளைஞனும் அவனது குடும்பமும் சந்திக்கும் இன்னல்களும் அதில் இருந்து அவன் தன் குடும்பத்தை காப்பாற்றுவதும் தான் கதை.இதற்கு அழகான, உணர்வுப்பூர்வமான,வாழ்வோடு ஒன்றிய திரைக்கதை அமைத்து, இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ள ராபர்டொ பெனிக்னி (Roberto Benigni) உலகத்தி்ரைத்துரையில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இவரது நிஜ வாழ்க்கை துணைவியான நிகொலொட்டா (Nicoletta) கதையின் நாயகி. இத்தாலியப் பெண்ணின் கதாபத்திரத்தில் வரும் இவருக்கும் ராபெர்டொவுக்கும் வரும் காதல் மனதை வருடும் இனிய பூந்தெண்றல் காற்று!காதலுக்கு சாட்சியாக ஒரு ஆண் குழந்தை என்று அமைதியாக போய்க்கொண்டிருக்கும் நாயகன்-நாயகி வாழ்வில் பூகம்பம் கிளப்புகிறது ஹிட்லரின் நாஜிப் படையெடுப்பு.இருபதாம் நூற்றண்டின் மிக மோசமான நிகழ்வான ஹொலொகஸ்ட் (Holocaust) என்ற சித்திரவதைகளை மெல்லிய வலியுணர்வோடும் நகைச்சுவையோடும் சொல்லியிருப்பது அருமை.

"இடுக்கண் வருங்கால் நகுக" என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க மலை போன்ற துன்பம் நெருங்கும் போதும் அதை தனக்கெயுரிய நகைச்சுவையுடன் தன் நாண்கு வயது மகனுக்கு அதை ஒரு போட்டி என்று கூறி சமாளிப்பது ராபெர்டொ வின் பண்பட்ட நடிப்பிற்கு எடுத்துக்காட்டு. "என்னை கூட்டிகொண்டு போ" என்று காதல் வயப்பட்டவுடன் நாயகனிடத்தில் கூறும் இடத்திலும், தன் கணவனும் மகனும் சிறை பிடிக்கப்படும் போது அலறி அடித்துக்கொண்டு ஒடி நாஜியிடம் கெஞ்சி தானும் அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளும் போதும் நாயகி மிளிர்கிரார்!

இன்னல்களை இலை மறை காயாக காண்பிற்கும் தொடக்க காட்சிகளான யூதக்குதிரை என்று வண்ணம் பூசி வெறுப்பை உமிழ்வதும் , யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்ற எச்சரிக்கை வாசகங்களும் இயக்குனரின் திறமைக்கு சான்று. "அமைதி தான் ஒங்கி ஒலிக்கும் குரல்" போன்றவை வசனங்களின் வீரியத்துக்கு ஒரு சிறு மாதிரி.

சிறிதும் சலிக்காமல் செல்லும் அழகிய இரண்டு மணி நேர கவிதை போன்ற இந்த திரைப்படம் முடிவுறும் போது என் இதயத்தின் ஓரத்தில் எழுந்த ஒரு உணர்வு என்னுள் உள்ள மனிதத்தை உறுதி செய்தது! மீண்டும் ஒரு முறை உரக்க கூவியது என் மனம் "வாழ்க்கை அழகானது"

Friday, December 29, 2006

அகரம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - திருவள்ளூவர்


எனக்கு சில நாட்களாகவே தமிழில் என் எண்ணங்களை வலை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆங்கில புது வருடப்பிறப்பிற்கு புதிதாக என்ன உறுதி மொழி எடுத்துக்கொள்ள போகிறாய் என்று எனது நண்பன் கேட்டதும் முதலில் இது தான் ஞாபகம் வந்தது.எனக்கு அவ்வாறு உறுதி மொழி எடுத்து அதை செயலாற்றுவது என்ற பழக்கம் எல்லாம் இது வரை இருந்தது இல்லை :)
ஆனால் இந்த முறை என்னையும் அறியாமல் கட கட வென்று ஆரம்பித்து விட்டேன். சரி! எதை முதலில் பதிவு செய்வது? குழப்பத்தில் இருந்த என்னை காப்பாற்றியவர்கள் தமிழன்னையும் வள்ளுவப்பெருந்தகையும் .
தமிழன்னை தன் முதல் எழுத்தை தந்தாள்! அய்யன் தன் முதல் குறளைத் தந்தான்! சரி அப்படி என்ன சிறப்பு இந்த அகரத்துக்கு? அம்மா என்ற உலகின் உயர்ந்த தெய்வத்துக்கு மனித மொழியின் வடிவம் குடுத்ததை விட வேறு ஒரு சிறப்பும் வேண்டு்மோ! இந்த உலகின் முதன்மையானதும் மிக உயர்ந்தத உணர்வுமான தாய்மைக்கு உரை குடுத்த இந்த அகரம் பெரும் பேறு பெற்றது!
சரி! அய்யனின் குறளுக்கும் அகரத்துக்கும் தாய்க்கும் என்ன சம்பந்தம்?
எதற்காக என்னுடைய மூளையில் திடீரென்று இந்த எண்ண அலைகள்!

அய்யன் குறளின் முழு அர்த்தம் புரிவதற்காகவோ?? :)

மனித மொழிக்கு அகரம் எப்படி முதன்மையானதொ அது போன்று இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் முதன்மையானவள் அம்மா என்னும் கடவுள்! இவ்வுலகை இயக்கும் உயிரானவள் அவள்!! ஆம் இது தான் இக் குறளுக்கு பதவுரை ஆக இருக்க முடியும்!

இக்குறளின் வாயிலாக வள்ளுவன் தாயை வணங்கி ஆரம்பித்து உலகம் போற்றும் உலகப்பொதுமறை கண்டான்!! இவ்வுலக மாந்தருக்கான வாழ்வியல் நூல் பிறந்தது!

மீண்டும் சந்திக்கும் வரை ....
ஒரு சிறு இடைவெளி ....

நன்றி!